நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வருகிற ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரிலீஸ் குறித்த டீசர், சில வாரங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. எல்லாரும் எல்லாமும் உன்னை கைவிட்டாலும் உன்னை நீ நம்பு என்ற தத்துவத்துடன் அந்த டீசர் வெளியாகி டிரண்டிங் ஆனது.
அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. கடந்த ஆண்டில் பொங்கலுக்கு வெளியான இந்த படத்துக்கு பிறகு அஜீத்குமார் நடிப்பில் 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளிவரவில்லை. ஆனால் இப்போது விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற 2 படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருக்கின்றன.
இதில் விடாமுயற்சி வருகிற ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையன்றும், அதன்பிறகு குட்பேட் அக்லி படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மே 1ம் தேதி நடிகர் அஜீத்குமாரின் பிறந்த நாள் என்பது இதில் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில் அஜீத்குமார் ரசிகர்கள், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் நாளை மறுதினம் 27ம் தேதி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் ஒரே ஒரு பாடல்தான் என்றும் கூறப்படுகிறது.
வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு முக்கிய பிரச்னை காரணமாக, வருகிற ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகுமா என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. அந்த சிக்கலை தீர்த்தால் மட்டுமே விடாமுயற்சி வெளியாகும் என்ற ஒரு சூழலும் நீடிக்கிறது.
அதாவது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்துதான் விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனம் தங்களது அனுமதி பெறாமல் பிரேக் டவுன் கதையை காப்பியடித்ததால், சமீபத்தில் ரூ. 150 கோடி நஷ்ட ஈடு தருமாறு அந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் கேட்டது. இப்போது பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் 30 கோடி ரூபாய்க்கு இறங்கி வந்துள்ளது. ஆனால் அந்த தொகையை இன்னும் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனம் தராமல் இருப்பதால், சிக்கல் இன்னும் நீடிக்கிறது.





