2012 ஆம் ஆண்டு சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. தீபாவளி பண்டிகையை ஒட்டி, விஜயின் துப்பாக்கி திரைப்படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படம் வெளியானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. இந்தப் படத்தின் இயக்குனர் தான் விக்னேஷ் சிவன்.
முதல் திரைப்படம் தோல்வியாக அமைந்ததால், அடுத்த படம் எடுப்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தார் அவர். இடையில் சிறிது காலம், நடிப்பிலும் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு, தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் அவர் நடித்திருப்பார். இந்த சமயத்தில்தான், விக்னேஷ் இவனுக்கு நானும் ரவுடிதான் திரைப்படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க, நயன்தாரா – விஜய் சேதுபதி ஆகியோர் இதில் நடித்தனர். நயன்தாராவின் திரையுலக பயணத்தில், மிக முக்கியமான திரைப்படங்களில் இது ஒன்றாக அமைந்தது. அவரது நடிப்பிலும் சரி அவரை அழகாக காட்டிய விதத்திலும் சரி நானும் ரவுடிதான் ரசிகர்களை பெரிய அளவிற்கு வந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராகவும் நிலை நிறுத்தினார் விக்னேஷ் சிவன்.
இந்த திரைப்படத்தின் சூட்டிங் போது, நயன்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இதை வெளிப்படையாக தெரிவித்த இருவரும், பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை எடுத்த விக்னேஷ் சிவன், அடுத்ததாக மீண்டும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றன.
இப்படியான சூழலில், அவர் அஜித் படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் அதுவும் நடைபெறாமல் போனது. இப்போது, லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். எல் ஐ சி அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி செட்டி எஸ்.ஜே சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர். லலித்குமார் படத்தை தயாரிக்கிறார். ஆனால் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே இந்த படத்திற்கு தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.
இந்த படத்தின் டைட்டில், தன்னுடையது எனக் கூறி இயக்குனர் எஸ் எஸ் குமரன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது, எல்ஐசி நிறுவனமும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் தங்களது நிறுவனத்தின் பெயரை, மற்றவர்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை இது கெடுக்கும் விதமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. டைட்டிலை மாற்றாவிட்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கும் படம் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.





