போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதன் பிறகு அடுத்த படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் திரைப்படத்தை இறக்கினார்.
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் அனிருத். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆக, நானும் ரவுடிதான் திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன், விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டது.
இதனை இருவரும் உறுதிப்படுத்திய நிலையில், பின்னாளில் திருமணமும் செய்து கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க இயக்கத்தை தாண்டி படங்களுக்கு பாடல் எழுதும் பணிகளையும் விக்னேஷ் சிவன் மேற்கொண்டார். பாடலாசிரியராக வலம் வந்த அவர், தனது மனைவியுடன் சேர்ந்து திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். தங்கள் நிறுவனத்திற்கு இவர்கள் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்தனர்.
இவர்கள் புரொடக்ஷனில் அருண் மாதேஸ்வரனின் முதல் திரைப்படம் ஆன ராக்கி வெளியானது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற கூழாங்கல் திரைப்படமும், விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடிதான் தயாரித்தது. இது ஒரு பக்கம் இருக்க இயக்கத்திலும், தனி கவனம் செலுத்தி வந்தார் விக்னேஷ் சிவன். சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை எடுத்த அவர், விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார்.
ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில் அவர் அஜித் குமாருடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் லைக்கா நிறுவனத்துடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையால் படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன். பிறகு, எல் ஐ சி என்னும் திரைப்படத்தை அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதன் சுருக்கமே எல்ஐசி.
இதில் கதாநாயகனாக கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இயக்கும் இந்த திரைப்படத்தில், எஸ் ஜே சூர்யா வுக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த நிலையில் இதன் சூட்டிங் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





