நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் தற்போது படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
படத்திலிருந்து இரண்டாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தந்தை வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறாராம். மகன் வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளாராம். இதுபோக நடிகர் ஜெய்யும் படத்தில் இருப்பதாக பேசப்படுகிறது.
இந்த படத்திற்காக விஜயின் தோற்றத்தை மாற்றுவதற்காக படக்குழு கலிபோர்னியா சென்றது. அங்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தின் முறையில் விஜயின் அவுட்லுக்கை மாற்றும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பின் பூஜை வரும் நான்காம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தளபதி 69 திரைப்படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை விஜயின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தான் இயக்க உள்ளாராம். ஏற்கனவே தெறி மெர்சல் பிகில் ஆகிய மூன்று படங்களை விஜய்க்கு கொடுத்த அவர் தற்போது நான்காவது முறையாகவும் இணைய இருக்கிறார்.
மேலும் இந்த படத்தை தயாரிக்க இந்தி திரை உலகைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் போட்டி போடுகிறதாம். இதனால் விஜயின் 69 ஆவது திரைப்படம் நேரடி இந்தி திரைப்படமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அட்லி விஜயை இயக்குவதற்கு அவரது ரசிகர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். பெரிய நட்சத்திரங்களை கையில் வைத்துக்கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் அவரது கதை எடுபடவில்லை என்றும், வசூல் வருகிறது என்பதற்காக மீண்டும் இந்த இணை சேரக்கூடாது என்றும் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





