நடிகர் விஜய்க்கு கடந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தையே பெற்றன. இருப்பினும் வசூலில் இந்த இரண்டு திரைப்படங்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் சக்கை போடு போட்டன.
இப்படியான சூழலில் தனது அடுத்த படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் இணைந்தார் விஜய். இந்த திரைப்படத்தை, பிகில் படத்தை இயக்கிய ஏஜிஎஸ் என்டர்டைன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.
இதன் சூட்டிங் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாடு திரைப்படத்தில் டைம் லூப் கான்செப்ட் மையமாக வைத்து படம் எடுத்த வெங்கட் பிரபு, இந்த முறை டைம் டிராவல் கதையை கையில் எடுத்திருக்கிறாராம்.
அதாவது நிகழ்காலத்தில் இருக்கும் விஜயும், எதிர்காலத்திலிருந்து வரும் விஜய்யும் சந்தித்துக் கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என வெங்கட் பிரபு பெயர் வைத்திருக்கிறார். இதனை ரசிகர்கள் சுருக்கி கோட் என்று அழைக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்து உட்பட பல்வேறு இடங்களிலும் நடைபெற்றது. கிட்டத்தட்ட படத்தின் சூட்டிங் பணிகளில் 70 சதவீதத்தை வெங்கட் பிரபு முடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரே ஒரு படத்தில் தான் விஜய் நடிப்பதாக அறிவித்திருப்பதால், கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் இறுதிக் காட்சியை இலங்கை மற்றும் ராஜஸ்தானில் நடத்த தான் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது அதனை கைவிட்டு இருக்கிறாராம் வெங்கட் பிரபு. அதற்கு பதில் திருவனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் ஷூட்டிங்கை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் இருக்கும் சூழலில், அங்கு படத்தை எடுத்தால் ரசிகர்கள் கூட்டம் மிக அதிக அளவில் கூடும் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும் தைரியமாக முக்கியமான காட்சியை அங்கு படமாக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





