நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்து வருகிறது. டைரக்டர் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கி வருகிறார். தற்போது ரஷ்யாவில் இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த மாதத்துடன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து, தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் தன் சினிமா நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக தனது அடுத்த பயணத்தை விஜய் துவங்க இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், முழு வீச்சில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அவர் ஆயத்தமாகி வருகிறார்.
நடிகர் விஜய்தான், இன்றைய நிலவரப்படி அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக இருக்கிறார். அதனால் அவரை படத்தை இயக்கவும், தயாரிக்கவும் ஏகப்பட்ட நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. அதுவும் அவரது கடைசி படம் என விஜயே அறிவித்து விட்டதால், கடந்த 2 மாதங்களாக இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜயின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸ் 2 மாதங்களாக நீடித்த நிலையில் அது தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு, சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கிய எச் வினோத்துக்கு தான் அந்த வாய்ப்பு என்பதும் உறுதியாகி உள்ளது. அதே போல் இந்த படத்தை தயாரிப்பது டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் டிவிவி தானய்யா தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விஜய் 69 படத்தில் இருந்து டிவிவி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளர் தானய்யா, இப்போதே விஜய் படத்துக்கான தியேட்டர் உரிமம், சாட்டிலைட், டிஜிட்டல் சார்ந்த உரிமங்கள் குறித்து விலை பேசி சில வியாபாரங்களை முடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்னும் விஜய் 69 படத்தை தயாரிப்பது குறித்த ஒப்பந்தம் போடவில்லை. முக்கிய முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. படம் பண்ணலாம் என்று மட்டுமே வாய்மொழி உத்தரவாக பேசிய நிலையில், தயாரிப்பாளர் டிவிவி தானய்யா தன்னிச்சையாக எடுத்த திடீர் முடிவுகளும், நடவடிக்கைகளும் விஜயை பயங்கரமாக அப்செட் செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய், தனது 69 படத்தை நீங்கள் தயாரிக்க வேண்டாம். எனக்கு விருப்பமில்லை என்று நேரடியாக சொல்லி விட்டார். இதையடுத்து சன்பிக்சர்ஸ் விஜய் படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.





