தினமும் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தின், உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் கொடுமையான சம்பவங்கள் நாட்டையே உலுக்கி விடுகிறது. விமான விபத்து, ரயில் விபத்து, மழைவெள்ளம், நிலச்சரிவு, வாகனங்கள் விபத்து என ஏதேனும் சில கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றன.
சமீபத்தில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. இப்போது கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டு சிக்கிக்கொண்டதாக மனதை பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசு, இறந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இன்னும் மண்ணில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்னும் உயிர்பலி அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் கேரளம் அரசு இருந்து வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சோகமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணமும், பிரார்த்தனைகளும் துயரம் அடைந்த குடும்பத்தினருடன்தான் உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன், என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்திலும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த போது, நேரில் சென்று ஆறுதல் கூறினார். இப்போது வயநாடு துயர சம்பவத்திலும் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் வரும் நாட்களில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை கேரளாவில் சென்று விஜய் சந்திக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





