தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை சொன்னாலே, அவர் இருந்த காலகட்டத்தில் அதிமுக கட்சியினர் நடுங்குவர். அம்மா சொன்னாங்க என்ற வார்த்தையை சொன்னால், பம்பரமாக சுழன்று விடுவர். அந்தளவுக்கு அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை பொருத்த வரை அமைச்சராக இருந்தாலும், எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் என எந்த பதவியில் இருந்தாலும், கட்சியில் மாவட்டம், மாநில அளவிலான நிர்வாகியாக இருந்தாலும், அவர் தவறு செய்துவிட்டால் என்பது தெரிய வந்துவிட்டால் கட்சியில் இருந்தும் தூக்கப்படுவார். பதவியில் இருந்தும் துரத்தப்படுவார்.
அதனால் ஜெயலலிதா பாணியில் அரசியல் நடத்தினால் மட்டுமே, கட்சி நிர்வாகிகள், பதவியில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பார்கள். தங்களது பதவிகளை துஷ்பிரயோகம் செய்யாமல், ஒழுக்கமாக நடந்துக்கொள்வார்கள். அதனால் ஜெ., வின் மிகப்பெரிய பலமே, அவரது துணிச்சலும், அதிரடியான நடவடிக்கைகளும்தான்.
அந்த வகையில்தான் தமது அரசியல் பயணம் இருக்க வேண்டும் என்று விஜய் திட்டமிடுகிறார். ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், அடுத்த சட்டசபை தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்ய போகவே கூடாது. எம்ஜிஆர் கட்சிக்கு ஓட்டு என்பது போல விஜய் கட்சிக்கு ஓட்டு என்ற மனநிலைக்கு மக்கள் வரும் அளவுக்கு சிறப்பான ஆட்சியை தர வேண்டும் என்பது விஜயின் லட்சியமாக உள்ளது.
மக்களிடம் பணம் கொடுத்தோ, பரிசு பொருட்கள் கொடுத்தோ, இலவச திட்டங்களை அறிவித்தோ ஓட்டுகளை பெறக் கூடாது. மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியலை நடத்த வேண்டும். அதற்கு நான் மட்டுமின்றி கட்சியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரும் மக்கள் மீது அக்கறை கொண்ட நல்ல நிர்வாகிகளாக மாற வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன், விஜய் கட்சியில் இருந்துக்கொண்டு திமுக நடத்தும் அரசியல் கூட்டங்களிலும், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் தொடர்ந்து பங்கேற்பது குறித்து தெரிய வந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் விஜய். பில்லா ஜெகனுக்கு பதிலாக அவரது தம்பி சுமனை, தூத்துக்குடி மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளார்.





