மகாராஜா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்த அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் தற்போது அவர் ஏஸ் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வருகிறார் ருக்மணி வசந்த்.
இது போக மிஷ்கின் இயக்கத்திலும் இரண்டு திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதில் ஒரு திரைப்படம் பிசாசு 2. ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் வரும் இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கேமியோ ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக முழுக்க முழுக்க கதாநாயகனாகவும் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மிஷ்கின் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நடுவே அண்மையில் பாண்டிராஜ் திரைப்படத்தில் நடித்து முடித்தார் விஜய் சேதுபதி.
நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. குடும்பங்களை மையப்படுத்தியும் நகைச்சுவையை கையில் எடுத்தும் இந்த திரைப்படத்தை பாண்டியராஜ் இயக்கி இருக்கிறாராம். அண்மையில் இதற்கான சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றன.
இப்படி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இது பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த நிலையில் தற்போது மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
கதாநாயகனாக குட் நைட் லவ்வர் குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த மணிகண்டன், அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். அவரது கதை பயங்கரமாக இருந்ததாகவும் நிச்சயமாக அதை நாங்கள் தான் தயாரிப்போம் என்றும் அண்மையில் விக்ரம் வேதா இயக்குனர் காயத்ரி கூறியிருந்தார். இப்படியான சூழலில் தான் மணிகண்டன் விஜய் சேதுபதியுடன் இணையும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு முத்து என்கிற காட்டான் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.





