நடிகர் கமல்ஹாசன், கலைத்துறையில் தன் ஆற்றலை நிரூபித்து உலக நாயகன் என்று போற்றப்படுபவர். சினிமாவில் அனைத்து தொழில்நுட்பங்களிலும் அவர் சிறந்து விளங்குபவர். நடிப்பு, பாட்டு, இசை, நடனம், கவிஞர், கதை எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்கம், தொழில்நுட்பம் என கமல் தொடாத இடங்களே இல்லை என்பதால்தான் அவர் சகலகலா வல்லவன், கலைஞானி என்றும் அழைக்கப்படுகிறார்.
சினிமாவை ஜெயித்தது போலவே, அரசியலிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற பெரிய லட்சியத்தோடுதான் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கினார். ஒரு கலைஞனாக ஜெயித்த அவரால், அரசியல்வாதியாக மக்கள் மனங்களை வெல்ல முடியவில்லை.
அதனால் முதலில் யாரை எதிர்த்து அரசியல் களத்தில் இறங்கினாரோ, யாரை வசைபாடி டிவியை ஸ்டார்ச் லைட்டை வீசி உடைத்தாரோ இப்போது அவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்து வருகிறார். ஸ்டாலினையும், உதயநிதியையும் தன்னுயிர் சகோதரர்கள் என்றும் கூறி, திமுக தொண்டரை காட்டிலும் அவர்களுக்கு விசுவாசம் காட்டி வருகிறார்.
அதே நேரத்தில் விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, அந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார். உண்மையில் கமல் அந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக வழிநடத்தினார். தன்னுடைய வார்த்தை ஜாலங்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பஞ்சாயத்துகளை எல்லாம் வேற லெவலில் கொண்டு சென்று, நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார். புத்தக பரிந்துரை என்ற பெயரில் மிக நல்ல நூல்களை பார்வையாளர்களுக்கு வாரந்தோறும் அறிமுகப்படுத்தி, வாசிப்பு ஆர்வத்தையும் மக்கள் மத்தியில் தூண்டினார்.
இப்போது அந்த இடத்தில் பிக்பாஸ் தொகுப்பாளராக அக்டோபரில் துவங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இவரும் நல்ல பேச்சாற்றலும், சிந்தனை திறனும் உள்ளவர்தான். வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு வெற்றி பெற்றவர்தான். நடிப்பில் மகாராஜாவாக திகழ்ந்த விஜய் சேதுபதி, ரகம் ரகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகும் போட்டியாளர்களை எப்படி சமாளிக்கப் போகிறார், எப்படி அவர்களது பஞ்சாயத்துகளை எதிர்கொள்ளப் போகிறார், கமல் அளவுக்கு இவரால் பெயர் வாங்க முடியுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





