ரெட்ரோ திரைப்படத்திற்குப் பிறகு சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் உருவாகி இருக்கிறது. முந்தைய காலங்களில் நகைச்சுவை மூலம் திரைத்துறைக்கு பரீட்சையமான ஆர்ஜே பாலாஜி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இவர் சரவணன் என்பவருடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
முதல்முறையாக ஆர் ஜே பாலாஜி, சூர்யா போன்ற பெரிய நட்சத்திரத்தை வைத்து படத்தை இயக்கியிருப்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதைக்கு மேயாத மான் இயக்குனர் ரத்னம் உதவி இருக்கிறார். அவரும் ஆர்ஜே பாலாஜியும் இணைந்துதான் இதன் கதை வடிவமைப்பில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. இதில் கதாநாயகியாக வருகிறார் திரிஷா. மலையாள நடிகை சுவாசிகா, யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
முதலில் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதில் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளே வந்தார். ஆன்மீகம் கலந்த கதையாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வருகிறார் சூர்யா.
இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்திலிருந்து டீசர் வெளியானது. படம் முழுக்க முழுக்க மசாலா பாணியில் எடுக்கப்பட்டிருப்பது அதன் டீசரை பார்க்கும்போதே தெரிவதாக ரசிகர்கள் கூறினர். வழக்கம்போல சூர்யாவின் பிரசன்ஸ் நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கருப்பு படத்தில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது முதலில் இந்த கதையை விஜய்யிடம் தான் ஆர்ஜே பாலாஜி கூறினாராம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறாமல் போக, மாசாணி அம்மன் எனும் பெயரில் திரிஷாவை வைத்து எடுக்க ஆசைப்பட்டு பிறகு சூர்யாவை வைத்து படத்தை எடுத்துள்ளாராம். அது மட்டுமல்ல கருப்பு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி காந்தாரா படத்தை போல இருக்கும் என்று திரை துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





