வரும் 19ம் தேதி, அதாவது வரும் வியாழன் அன்று விஜய் நடித்த லியோ படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார், அனிரூத் இசையமைத்து இருக்கிறார். இதில் பார்த்திபன், லியோ என்ற இரண்டு வேடங்களில், விஜய் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சத் தத், மாஸ்டர் சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் லியோவில் நடித்துள்ளனர்.
லியோ படத்துக்கு, முதலில் ரசிகர் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னர் ரசிகர் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு, ரசிகர் சிறப்பு காட்சி உள்பட தினமும் 5 காட்சிகள் வரை, திரையிட அனுமதி வழங்கியுள்ளது. எனவே, ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில், லியோவை வரவேற்க காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், லியோ படத்தை இயக்கிய அனுபவங்கள் குறித்து கூறியதாவது, விஜய் நடித்த மாஸ்டர், லியோ என்ற இரண்டு படங்களை இயக்கி இருக்கிறேன். மாஸ்டர் பண்ணும்போது, பெரிய நடிகர் என்பதால் பழகுவதில் தயக்கம் இருந்தது. ஆனால், ஒரே வாரத்தில் சார் என அழைப்பதில் இருந்து அண்ணா என அழைக்கும் அளவுக்கு, எல்லோரிடமும் சகஜமாக, ஜாலியாக பழகினார். லியோ படம் பண்ணும்போது, எந்த மனத்தடையும் இன்றி, ஜாலியாக அனைவரும் வேலை செய்தோம்.
இந்த படம், முதலில் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும். அடுத்து, விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் இருக்கும். கதை சார்ந்து இதில் விஜய் நடித்திருக்கும் காட்சிகள், மிக வித்யாசமாக அதே வேளையில் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். கதை சார்ந்த அவரது பர்சனாலிட்டியை அவரது ரசிகர்கள் ரசிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
முதலில் மூணாறு, தேனி மாவட்டம் மலை அடிவார பகுதிகள், கொடைக்கானல் போன்ற இடங்களில் தான் லியோ படத்தின் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டேன். ஆனால் லோகேஷன் பார்க்க போனபோதே, அங்குள்ள பொதுவெளிகளில் விஜய் வைத்து லைவ் ஆக படம் பண்ண முடியாது. ரசிகர் கூட்டம் மிக அதிகம். நடைமுறை சிக்கல்கள் அதிகரிக்கும் என்பது எனக்கு புரிந்தது. அதற்கு பிறகுதான், காஷ்மீரில் படம் பிடிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்.
காலை 7 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், மாலை 6 மணிக்கு விஜய் வீட்டுக்கு கிளம்பி விடுவார். அதுதான் அவரது ஷூட்டிங் ஷெட்யூல். ஆனால், லியோ படத்தின் கதைப்படி 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு நீங்கள் இரவுநேரங்களில் நடிக்க வேண்டும் என, ஆரம்பத்திலேயே நான் அவரிடம் தெளிவாக சொல்லி விட்டேன். அதற்கு மேல் நாட்களை அதிகமாக கேட்கக் கூடாது, நான் ஒத்துக்க மாட்டேன் என விளையாட்டாக, என்னிடம் கைநீட்டி சத்தியம் வாங்கிக் கொண்டார். நைட் ஷூட்டிங் நடக்கும்போது 2 மணி நேரம் முன்னதாக வந்து, தயாராகி, நல்ல விதமாக நடித்துக் கொடுத்தார், என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.





