நடிகர் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், கிச்சா சுதீப், வைபவ், அஜ்மல், ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை தி கோட் படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளிவந்துள்ளன. இதில் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், நீ கண்ணால பார்த்து ஒரு ஸ்பார்க்கு என 3 பாடல்களுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இசையில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் ஜொலிக்கவில்லை என்று ரசிகர்கள் அதிருப்டைந்து விட்டனர்.
எனினும் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா தி கோட் படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும் படம் வெளியாகி, ரசிகர்களின் பார்வைக்கு வந்த பிறகே அதை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் விஜய் நடிப்பில் படத்தில் வெளியான 3 பாடல்களுமே எந்த விதத்திலும் ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தி கோட் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்ற நிலையில், 3 பாடல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இதில் 4வது பாடலாக விஜய், திரிஷா குத்தாட்டம் போட்ட அயிட்டம் பாட்டை அடுத்ததாக வெளியிட இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இதுவரை எந்த படத்திலும், எந்த நடிகருடனும் தனி பாடலுக்கு குத்தாட்டம் போடாத திரிஷா, முதன்முறையாக விஜயுடன் தி கோட் படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி, லியோ என 5 படங்களில் விஜய்க்கு திரிஷா ஜோடியாக இதுவரை நடித்திருக்கிறார். இதில் கில்லி, திருப்பாச்சி என 2 படங்களும் மாஸ்ஹிட் படங்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக தரணி இயக்கத்தில் கில்லி படம் விஜய்க்கும், திரிஷாவுக்கும் அவர்களது திரை பயணத்தில் பெரிய திருப்புமுனையை தந்தது.
கில்லி படத்தில் விஜய், திரிஷா நடனத்தில் இடம்பெற்ற அப்படிப் போடு போடு போடு அசத்திப் போடு தன்னாலே என்ற பாடல் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. அதே போல் தி கோட் படத்தில் விஜய், திரிஷா போடும் குத்தாட்ட பாடலும் டிரண்டிங் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பாட்டை வருகிற 31ம் தேதி மாலை வெளியிட தி கோட் படக்குழு திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.





