எழுத்தாளர் மற்றும் நடிகரான வேல ராமமூர்த்தி எழுதிய “குற்றப் பரம்பரை” நாவல் மிகவும் புகழ்பெற்ற நாவலாகும். இந்த நாவல் தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட நாவல். இந்த நாவலை படமாக்க வேண்டும் என்று பாலா, பாராதிராஜா போன்றோர் பல வருடங்களாக முயன்று வருகின்றனர். அந்தளவுக்கு பல திடுக்கிடும் வரலாற்று தகவல்களையும் திருப்பங்களையும் கொண்ட நாவல் அது.

இந்த நிலையில்தான் கடந்த வருடம் இயக்குனரும் நடிகருமான சசிகுமார், “குற்றப் பரம்பரை” நாவலை வெப் சீரீஸாக இயக்கவுள்ளார் என்று ஒரு தகவல் வந்தது. மேலும் இந்த வெப் சீரீஸில் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வரை வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது “குற்றப் பரம்பரை” வெப் சீரீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது “குற்றப் பரம்பரை” வெப் சீரீஸில் சண்முக பாண்டியன் வில்லனாக நடிக்கிறாராம். அதே போல் இந்த வெப் சீரீஸில் தெலுங்கு நடிகரான ராணா ஹீரோவாக நடிக்கிறாராம். “குற்றப் பரம்பரை” வெப் சீரீஸ் முழுவதும் மதுரை, தேனி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில்தான் படமாக்கப்பட உள்ளதாம். ஆதலால் படக்குழுவினர் மதுரையிலேயே அலுவலகத்தை தயார் செய்துள்ளனராம். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு சக்தி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் இதற்கு முன் “சகாப்தம்”, ‘மதுரை வீரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சசிகுமாரின் “குற்றப் பரம்பரை” வெப்சீரீஸில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





