வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பொன்ராம். சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் இது மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். ஆரம்ப கட்டத்தில் அவர் வளர்ந்து கொண்டிருந்தபோது, அவருக்கு மிகப்பெரிய ஏணிப்படியாய் இந்த திரைப்படம் அமைந்தது.
நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் கச்சிதமாக இருந்ததால், மக்கள் சாரை சாரையாக திரையரங்குகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த திரைப்படம் கொடுத்த வெற்றி இந்த கூட்டணியை மறுபடியும் இணைக்கச் செய்தது.
இருவரும் இணைந்து ரஜினி முருகன் என்னும் திரைப்படத்தை கொடுக்க அதுவும் ஹிட் ஆனது. இதிலும் சிவகார்த்திகேயன் தனது காமெடியால் கலக்கி இருந்தார். சூரி சிவகார்த்திகேயன் ஜோடி இணைந்து அடித்த லூட்டியால் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெற்றது.
இப்படி இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்து பொன்ராம் முக்கிய இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அவர் சீம ராஜா திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வியை சந்தித்தது.
படத்தின் சில காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுவாரஸ்யத்தை கொடுக்காததால் சீம ராஜாவை மக்கள் வரவேற்கவில்லை. இதன்பிறகு சசிகுமார் சத்யராஜை வைத்து எம் ஜி ஆர் மகன் என்னும் திரைப்படத்தை எடுத்து படுதோல்வியை சந்தித்தார் பொன்ராம். இப்படியான சூழலில் தான் அவர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
முந்தைய திரைப்படங்களைப் போல் இல்லாமல் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு கொம்பு சீவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுகளில் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





