தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் மதகஜ ராஜா படத்தின் விழா ஒன்றில் விஷால் பங்கேற்றார். அப்போது மெலிந்த தேகத்துடன் கைகள் நடுங்கியபடி அவர் காணப்பட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.
அவர் மலேரியா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த விழாவில் தொகுப்பாளர் டிடி தெரிவித்தார். எனினும் அவர் பலத்த நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் நீண்ட காலமாக அவருக்கு உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதாகவும் தகவல் பரவியது. இது வதந்தி என்று கூறி இதற்காக மருத்துவ சான்றிதழும் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டது.
மேலும் இதுகுறித்து விஷால் மக்கள் நல இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களாக நடிகர் தயாரிப்பாளர் சமூக சிந்தனையாளர் விஷால் உடல்நிலை குறித்து பலரும் பல்வேறு அவதூறுகளையும் தங்களுக்கு தோன்றிய கதைகளையும் கற்பனைகளையும் பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்.
தற்போது அவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக இவ்வளவு பொய்களையும் வதந்திகளையும் பரப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் விஷால் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு கேரளா ஆந்திரா தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்களுக்கும் மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
நடிகர் விஷாலுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும் சிலர் அறத்தை மறந்து தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களை எப்போதும் மக்கள் நிச்சயம் அடையாளம் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு அவர்களுக்கு எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை. அதே வேளையில் இன்று எங்கள் தலைவர் விஷாலுக்கு ஏற்பட்டுள்ள அவதூறுகள் கற்பனைக் கதைகளை பரப்புவது போல், இனிவரும் காலங்களில் வேறு எவருக்கும் நடக்கக்கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





