நடிகர் விஜயின் கோட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்கும், ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று படக்குழு உறுதியாக கூறி வந்த நிலையில் அப்படி எதையும் அந்த திரைப்படம் செய்யவில்லை.
இதற்குக் காரணம் சில ரசிகர்களிடமிருந்து வந்த கலவையான விமர்சனம் தான். வழக்கம்போல் விஜய் திரைப்படத்திற்கு குடும்பம் குடும்பமாக சென்று பார்த்தாலும், இரண்டாம் பாதியில் ஒருவித அயற்சி இருந்ததாலும், படத்தின் நீளமும் கோட் திரைப்படத்திற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்தது.
குறிப்பாக ரிப்பீட்டட் ஆடியன்ஸ் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவில்லை. இதனால் கோட் திரைப்படம், சாதனைகளை ஈட்ட தவறியது. இருப்பினும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அந்த திரைப்படம் தோல்வியை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அந்த திரைப்படம் குவித்து இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தனது அரசியலிலும் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் மாநாட்டில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.
இதனிடையே தனது கடைசி திரைப்படத்தையும் விஜய் விரைந்து முடிக்க இருக்கிறார். அக்டோபர் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பு துவங்குகிறது. அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கிய எச் வினோத், இந்த திரைப்படத்திற்காக விஜய் உடன் சேர்ந்து இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், அரசியல் நிச்சயம் இருக்கும் என்றும், பிற அரசியல்வாதிகளை அட்டாக் செய்யாதவாறு காட்சிகள் இடம்பெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக விஜயின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதை இந்த திரைப்படம் பிரதிபலிக்கும் என்றும், சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனை சரியான பாதையில் கொண்டு செல்ல வினோத்திற்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





