நடிகை குஷ்பு, கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி இவர்தான். இன்று நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்றவர்களை விட பலமடங்கு ரசிகர்கள், குஷ்பு குஷ்பு என புலம்பும் அளவுக்கு, தன் கவர்ச்சியான நடிப்பால் அவர்களை பித்துபிடிக்க வைத்தவர். பி வாசு இயக்கிய சின்னதம்பி படத்துக்கு பிறகு, அவர் வேற லெவலில் இருந்தார்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சிய குஷ்பு, பிறகு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து, இரண்டு பெண் பிள்ளைகளுக்க தாயானார். தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அவந்திகா பிக்சர்ஸ் என்ற படங்கள், டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.
நடிகை குஷ்பு, சினிமாவில் வாய்ப்பு வெகுவாக குறைந்த நிலையில் திடீரென அரசியல் பிரவேசம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி இருந்த போது, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக முக்கியத்துவம் கிடைத்தது. பிறகு கனிமொழி, இவரை ஓரம் கட்ட, கட்சியில் எந்த முக்கியத்துவமும் கிடைக்காமல் போனது.
இதையடுத்து குஷ்பு, திமுகவை விட்டு வெளியேறி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல்ஜி, ராகுல்ஜி என அவர் புகழ்பாடிய குஷ்பு, மாநில தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரசாரம் செய்தார். ஆனால் அங்கும் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜகவுக்கு வருகை தந்தார் குஷ்பு. இப்போது அவர் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
குஷ்பு, அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பெண்களுக்கு கற்பு அவசியமில்லை என்று ஒருமுறை கூறி, பலத்த சர்ச்சைக்கு ஆளானார். சமீபத்தில் சேரி என்று கிண்டலாக ஒரு பதிலை சொல்லியதால், அவருக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தது. மன்சூர் அலிகான், திரிஷா விவகாரத்திலும் இவரது நடவடிக்கையை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய குஷ்பு, மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால், திமுகவுக்கு மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா, என கேள்வி எழுப்பியிருந்தார். இது மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. அரசு தரப்பில் பெண்களுக்கு தரும் உரிமைத் தொகையை, மிக கேவலமான வார்த்தையில், இழிவாக விமர்சித்த குஷ்புவுக்கு எதிராக திமுக சார்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் பெண்கள், கடுமையாக எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.





