பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி நேற்றிரவு காலமானார். அவரது மறைவு குறித்து தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா தனது பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு அபூர்வமான குயில் மௌனமானது. சிங்காரவேலனே என்று அவர் பாடிய போது உலகமே அவருடன் இணைந்து பாடியது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலிலும் உலகம் அவருடன் இணைந்தது.
அவரது பாடல்களை பாடுவதை உலகம் ஒருபோதும் நிறுத்தவில்லை. இனி ஒருபோதும் அவரது புகழை பாடுவதை நிறுத்தப் போவதுமில்லை. கொஞ்சும் சலங்கை காலத்தில் இருந்தே அவரை எங்களுக்கு தெரியும். அன்பும் பாசமும் நிறைந்த மனிதராக திகழ்ந்த அவரது இயல்பு ஒருபோதும் மாறவில்லை. இசைஞானி என்ன விரும்பினாரோ அதை அவர் சிறப்பாக வழங்கினார்.
துரதிஷ்டவசமாக திரையுலகம் இப்போது இவரை போன்ற பல ஜாம்பவான்களை தொடர்ந்து இழந்து வருகிறது. முரளியுடன் இணைந்து எங்கள் நாடகங்கள் அனைத்தையும் பார்வையிட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தது எனக்கு கிடைத்த ஒரு சிறப்பான பாக்கியம். அவரது குழந்தையைப் போன்ற சிரிப்பு மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக் கூடியது. அவர் தன் மகனை மிகவும் நேசித்தார்.
இப்போது அவரும் தன் மகனுடன் இணைந்து விட்டார். ஜானகி அம்மா நீங்கள் அவர்களுடன் இருப்பதற்கு தேவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் சாந்தி. தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டும் என்று நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தனது இரங்கல் பதிவில் கூறியிருக்கிறார். அனிருத் தனது பதிவில், ஜானகி அம்மா அமைதியாக துயில் கொள்ளுங்கள். உங்கள் ஆசிர்வாதங்களை என்றென்றும் நினைவு கூறுவேன். ஓம் சாந்தி என்று கூறியிருக்கிறார்
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவில், ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பல தலைமுறையினர் உங்கள் குரலை கேட்டு வளர்ந்துள்ளனர். இனிவரும் தலைமுறையினரும் அதை தொடர்ந்து போற்றி பாதுகாப்பார்கள். எங்கள் வாழ்வில் காலத்தால் அழியாத பாடல்களை மறக்க முடியாத உணர்வுகளையும் நிரப்பியதற்கு நன்றி. உங்கள் குரல் என்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாகவே இருக்கும் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.
பாடகி சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், அவள் ஒரு கடவுள் 20 – 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ஒரு பாடலை பாடினார். அந்த குரல் ஒரு குழந்தை போல் ஆண் குரல் போலவும் ஒலித்தது. நான் மேடைக்கு பின்னால் இருந்தேன். அந்த பாடலை முழுவதுமாக பாடுவது அவர்தான் என்று தெரிந்து கொள்ளும் வரை அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்து கொண்டு இருந்தேன். மலையாளம் கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கில் அவரது பங்களிப்பு ஏராளம். நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி. ஒருவேளை அவர் முருகனுக்கு சிங்காரவேலனே தேவனாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.





