இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இருவருமே தந்தையை போலவே நல்ல இசையமைப்பாளர்கள்தான். இதில் கார்த்திக் ராஜா ஆரம்பத்தில் பல படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் சமீபகாலமாக தந்தை இளையராஜாவுக்கு இசையில், அவர் இசைக் கச்சேரிகளில் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா ஆரம்பம் முதலே பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த வகையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இசைமைக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு குறித்த காலத்தில் இசையமைத்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஒரு புகார் இருந்து வருகிறது. அத்துடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகி சில ஆண்டுகள் ஆகிறது. அங்கு குடும்பத்துடன் குடியேறிய அவர், இசை ஸ்டுடியோவும் அங்கேயே கட்டி அங்குதான் பணிபுரிகிறார்.
இதனால் அவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க தொடர்பு கொள்வதே தமிழ் சினிமா தயாரிப்பார்கள், இயக்குனர்களுக்கு பெரும் போராட்டமாகி விட்டது. இந்த காரணங்களால் சமீபகாலமாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் துவங்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏற்கனவே படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. புதிய படங்களுக்கு இசையமைக்க அனிருத் சாய் அபயங்கர் போன்ற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு குவிகிறது. தனது அண்ணன் கார்த்திக் ராஜா மகனும் இசைத்துறைக்கு வந்து விட்டார். இனியும் அலட்சியம் காட்டினால், நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்று புரிந்துக்கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
அதனால் இப்போது தன்னை வெகுவாக யுவன் மாற்றிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சத்யபாமா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியார் இல்லத் திருமண விழாவில் இசைக்கச்சேரி நடத்திய யுவன் சங்கர் ராஜா, பகத் பாசில், வடிவேலு நடித்துள்ள மாரீசன் படத்திற்கும் பின்னணி இசையில் அசத்தி இருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியே பின்னணி இசையால் அசந்து போய் போனில் யுவனை அழைத்து பாராட்டியிருக்கிறார். இந்த மாற்றம் யுவனுக்கு பழையபடி அதிக வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.





