சென்னையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது. மிக் ஜாம் புயல் காரணமாக முப்பது மணி நேரத்திற்கும் விடாமல் சென்னையில் கன மழை கொட்டி தீர்க்க, மாநகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த போதும், புறநகர் பகுதிகளுக்கு அது சரியாக சென்று சேரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
மாநகரில் தற்போது மழை ஓய்ந்துள்ளதால், சில இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால், காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் சிக்கி இருப்பதாகவும், அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு அவர், காரப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. அதன் நீர்மட்டமும் மோசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. மின் வசதி இணைய வசதி என எதுவுமே இல்லை. மாடியின் மேற்பகுதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிக்னல் கிடைக்க அங்கிருந்து இந்த தகவலை அனுப்புகிறேன். எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் காரப்பாக்கத்தில் உள்ள விஷ்ணு விஷாலின் இல்லத்திற்கு படகுமூலம் விரைந்தனர். நடிகர் உட்பட அவரது குடும்பத்தினர் படகுமூலம் மீட்கப்பட்டனர். அதில் ஹிந்தி நடிகர் அமீர் கானும் இருந்தார். அமீர்கான் தனது தாயின் உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக இங்கு தங்கி இருக்கிறார்.
இப்படி இருக்க விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியதை அறிந்த அஜித் குமார், தனியாக வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஷ்ணு விஷால் வசிக்கும் குடியிருப்புகளை சேர்ந்தவர்களுக்கும் அஜித்குமார் உதவி இருக்கிறார். இதைத்தொடர்ந்து மூவரும் புகைப்படம் எடுக்க அதனை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் விஷ்ணு விஷால் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.





