நடிகர் ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே படத்தின் தயாரிப்பாளர்தான். அந்த படத்தில் கதாநாயகனாக ராஜ்கிரண் நடிக்க காரணம், நடிகர் ராமராஜன்தான். அவரது கால்ஷீட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா
வற்புறுத்தியதால், அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜ்கிரண்.
ஆனால் மாயாண்டி கேரக்டரில் நடித்த ராஜ்கிரணுக்கு முதல் படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி போன்ற படங்களில் நடித்தார். ராஜ்கிரண் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனார், ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார்.
பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, சண்டக்கோழி, கொம்பன் என பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வரும் ராஜ்கிரண்தான், நடிகர் வடிவேலுவை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர். என் ராசாவின் மனசிலே படம்தான் வடிவேலு நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பலருக்கும் ராஜ்கிரணை நடிகராக தான் தெரியும். ஆனால் அவர் 1980களில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருந்தவர் என்பது பலருக்கு தெரியாது. ராமராஜன் நடித்த சில படங்களை தயாரித்தவர் ராஜ்கிரண்தான். ஆனால் அவரது உண்மையான பெயர் ராஜ்கிரண் கிடையாது. சினிமாவுக்காக ராஜ்கிரண் என மாற்றிக்கொண்டது. அவரது பெயர் மொய்தீன் பாய்.
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில், அந்த படத்தை விநியோகம் செய்ய விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. ஏனெனில் டாப் ஹீரோவான கமல்ஹாசன், இந்த படத்தில் சப்பாணி கேரக்டரில் நடித்திருக்கிறார். கோவணம் கட்டியபடி சில காட்சிகளில் நடித்திருக்கிறார். மூக்கில் வளையம் மாட்டிய அவரது கெட்டப்பே சரியில்லை. அதனால் படம் ஓடாது என பலரும் மறுத்துவிட்டனர்.
ஆனால் விநியோகஸ்தரான ராஜ்கிரண், 16 வயதினிலே படத்தை கமலுக்காக, ரிஸ்க் எடுத்து விநியோகம் செய்திருக்கிறார். படம் பெரிய லாபத்தை தந்திருக்கிறது. அப்போதே கமல் மீது நம்பிக்கை வைத்து ரிஸ்க் எடுத்தவர் நடிகர் ராஜ்கிரண். ஆனால் கமலுடன் ஒரு படத்தில் கூட இதுவரை அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





