நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய, ஞானவேல் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். லைக்கா நிறுவனம் வேட்டையன் திரைப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில், பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக, மலையாளத்திலிருந்து மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாசில் ஆகியோர் வேட்டையன் படத்தில் உள்ளனர். இதேபோல் தெலுங்கில் இருந்து, ராணா இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்காக கருப்பு கண்ணாடியை அணிந்தபடி ரஜினி காட்சியளிக்கிறார்.
அவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக படத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் படத்திலிருந்து வெளியான அத்தனை போஸ்டர்களிலும் அவர் கண்ணாடி அணிந்தபடியே இருந்திருந்தார். முதலில் இந்த திரைப்படம் என்கவுண்டருக்கு எதிரான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, கல்வித் துறையில் நடைபெறும் குற்றங்களை சுட்டிக்காட்டும் திரைப்படமாக வேட்டையன் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வில்லனாக ராணா நடிக்கிறார். பகத் பாசிலுக்கு நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு, திருவனந்தபுரத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்றது நம் அனைவருக்கும் தெரியும்.
மொத்தம் 80 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்டு ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். தனது அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட் ஆகி வரும் சூழலில், சொன்ன தேதியில் படத்தை முடிக்க முடியாதா என்று அவர் படக்குழுவிடம் கோபம் அடைந்து விட்டாராம். இதை அறிந்த ரசிகர்களும், இன்னும் 60 நாட்கள் என்றால் இதுவரை என்னதான் படத்தை எடுக்கிறீர்கள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.





