நடிகர் விஜய் அண்மையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார். இத்துடன், தான் ஒப்புக்கொண்டிருக்கும் திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் விஜய் தெளிவாக கூறினார்.
தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அரசியல் களம் சார்ந்த ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். அனேகமாக இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் தான் இயக்குவதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்கள் வரவேற்றாலும், அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் விஜய் நடித்திருக்கும் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவுக்கு தற்போது ரீ ரிலீஸ் காலம் என்று கூறலாம். கடந்த மூன்று மாதங்களாக, பல்வேறு திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இதில், சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் கவனம் ஈர்த்தன.
தனுஷ் நடித்து வசூல் ரீதியாக வெற்றி பெறாத 3 திரைப்படமும், ரீ ரிலிஸ் செய்யப்பட்டபோது கொண்டாடப்பட்டது. தற்போது இந்த வரிசையில் தான், விஜயின் கில்லி படம் இணைந்திருக்கிறது. விஜயின் திரையுலக பயணத்தையே திருப்பி போட்ட திரைப்படம் தான் கில்லி. இப்போது வரை ரசிகர்களால் அந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தெலுங்கில் ஒக்கடு என்னும் திரைப்படத்தின் ரீமேக் தான் கில்லி. தரணி இயக்கியிருந்த இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. ஜெட் வேகத்தில் செல்லும் திரைக்கதை, விஜய்யின் நகைச்சுவை காட்சிகள், வில்லத்தனத்தில் மிரட்டிய பிரகாஷ்ராஜ், அழகு பதுமையாக காட்சியளித்த திரிஷா என அனைத்து விஷயங்களும் திரைப்படத்தில் கச்சிதமாக இருந்ததால் கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இப்படியான சூழலில், வரும் இருபதாம் தேதி அந்த திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், இப்போதே ஆர்வத்துடன் புக் செய்து வருகின்றனர். படத்தின் ப்ரீ சேல் மட்டும் 50 லட்சத்தை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக முதல் நாளில் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரு திரைப்படத்திற்கு இத்தனை வரவேற்பு இருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





