தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் பின்னால் ஓடுவதும், அவர்களே ஒரு காலகட்டத்தில் தோல்வியடையும் போது அவர்களை கண்டுக்கொள்ளாமல் விலகி விடுவதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. பெரிய வெற்றி தரும் இயக்குனர்களை, பெரிய நட்சத்திர நடிகர்களே தொடர்பு கொண்டு எனக்காக ஒரு கதை ரெடி செய்யுங்கள் என்பார்கள்.
அதே இயக்குனர் அடுத்தடுத்த படங்களில் தோல்வியை சந்திக்கும் போது, அந்த இயக்குனரை கண்டுக்கொள்ள மாட்டார்கள். அவரே தேடிப் போய் வாய்ப்பு கேட்டாலும், இப்போதைக்கு ரொம்ப பிஸி என்பது போல காட்டிக் கொள்வார்கள். திரையுலகை பொருத்த வரை இது பல இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, நடிகர்களுக்கு கூட நடப்பது வழக்கம்தான்.
அந்த வகையில், இயக்குனர் முத்தையா அவரது இயக்கத்தில் முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக கார்த்தி நடித்த கொம்பன், விருமன், சசிக்குமார் நடித்த குட்டிப்புலி, கொடிவீரன், விஷால் நடித்த மருது உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு முத்தையா இயக்கிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. அதன்பிறகு அவரது இயக்கத்தில் யாருமே முன்வராத நிலையில், தனது மகனையே கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் முத்தையா.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோரிடம் பேசிய அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டியன் படத்தில் விக்ரம் பிரபு, தேவராட்டம் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் இருவரும் முத்தையா படத்தில் நடிக்க சம்மதித்துள்ளனர்.
நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபு, நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் இருவருக்குமே, தென்மாவட்டங்களில் அதிக மரியாதை உள்ள நிலையில், மீண்டும் தென்மாவட்ட மக்கள் விரும்பும் விதமான ஒரு கதையில் இருவரையும் இரட்டை நாயகர்களாக நடிக்க வைத்து டைரக்ட் செய்கிறார் முத்தையா. மற்ற நடிகர்கள் முத்தையாவை அலட்சியப்படுத்திய நிலையில், நன்றி மறவாமல் தங்களது நட்பை காட்டியுள்ளனர் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.





