நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் உச்ச நடிகராக இருந்து வருகிறார். இப்போதும் 73 வயதில் ஹீரோவாக நடித்து அசத்துகிறார். கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம், 600 கோடி ரூபாய் வசூலித்து, ரஜினிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இப்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து, நெல்சன் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து 3 படங்களில் நடிக்க 3 தயாரிப்பு நிறுவனங்கள் ரஜினிகாந்திடம் ஒப்புதல் பெற்றுள்ளன.
நடிகர் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவரது கணவர் தனுஷ். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா மணவாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பரஸ்பரம் விவாகரத்து கேட்டுள்ள அவர்களுக்கு, வரும் அக்டோபரில் சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், 2வது திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த அம்பானி இல்ல திருமண விழாவில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா, அவரது கணவர், மகன் வேத் கிருஷ்ணா என குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது தரமான சம்பவம் ஒன்று ரஜினிகாந்த் வீட்டில் நடந்துள்ளது. அதாவது சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணா, பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதிருக்கிறார். உடனே இதை ரஜினிகாந்திடம் கூறியிருக்கிறார். பேரனின் பிடிவாதத்தை கண்டு ரஜினிகாந்த், வேத் கிருஷ்ணாவிடம் சமாதானம் பேசியிருக்கிறார்.
நானே உன்னை, காரில் அழைத்துச் சென்று உன் வகுப்பறையில் விடுகிறேன் என்று கூறி, அவரே தனது பிஎம்டபிள்யு காரில் பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வகுப்பறைக்கும் சென்று பேரனை விட்டுள்ளார். அந்த நிகழ்வுகளை புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினி மகள் சௌந்தர்யா, ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆப் ஸ்கிரீனிலும் சரி எந்த ரோல் கொடுத்தாலும் அதை செய்வதில் நீங்கள் வல்லவர். சிறந்த தாத்தா, சிறந்த அப்பா என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.





