தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் இதுவரை 400 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. இனி தனது 69வது படத்தில் நடித்து முடித்துவிட்டு தமிழக அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய். தற்போது அவரது அரசியல் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சியின் கொள்கை பாடலையும் வெளியிட்டார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாடு எப்போது என்று விஜய் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இன்று அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடன் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகிற அக்டோபர் மாதம் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள விசாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெரு விழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறி இருக்கிறார்.
முதலில் மதுரையிலும், பிறகு திருச்சியிலும் அதையடுத்து கோவை உள்ள சில மாவட்டங்களிலும் இந்த மாநாடு நடக்க விஜய் கட்சியினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், முக்கிய மாவட்டங்களில் மாநாடு நடத்த போதிய அளவில் பெரிய அளவில் இடமும், போலீஸ் அனுமதியும் கிடைக்கவில்லை. தற்போது பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்த மாநாடு, வருகிற அக்டோபர் 27ம் தேதி நடக்கிறது. விஜயின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





