தமிழ் சினிமாவில் பெரிய அளவில் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் லாபமடைந்தாலும், தியேட்டர்களை பொருத்த வரை பல விதங்களில் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தியேட்டர் பராமரிப்பு, மின்கட்டணம், ஊழியர்கள் சம்பளம், ஓடிடி படங்கள் என பெரிய அளவில் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. ரஜினி, விஜய், அஜீத்குமார் படங்கள் ரிலீசாகும் போது மட்டுமே கணிசமான லாபத்தை அடைகின்றனர்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் தயாரிப்பாளர் கவனத்திற்கு என நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், பெரிய நடிகர்களின் படங்கள் 8 வாரங்கள் கழித்தும், அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்கள் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடி தளங்களில் திரையிடும்படி கேட்டுக் கொள்ளுதல், தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால், தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது, என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு என்ற வகையில், திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும், மால்களில் உள்ள திரையரங்குகளில் ரூ. 250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு 200 ரூபாய் வரையும், ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 150 ரூபாய் வரையும் என்று கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்.
அருகில் உள்ள பிற மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும். ஆபரேட்டர் லைசன்ஸ்சில் புதிய வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் தியேட்டர் உரிமையாளர்கள் அடையவில்லை. அதையே மாற்றி ஆப்ரேட்டர் லைசன்ஸ் தேவையில்லை அல்லது எளிய முறையில் மாற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மால்களில் உள்ள திரையரங்குகளில் மற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் MSME யின் கீழ் வருவதால் MSME விதிப்படி எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தால் திரையரங்குகள் நஷ்டம் இன்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.




