நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். அதன்பிறகு அவர் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, அமிதாப் பச்சன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலம் பாதித்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியு பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது, இதயத்தில் இருந்து வெளியே செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால், அங்கு அறுவை சிகிச்சை இன்றி ஸ்டண்ட் வைக்கப்பட்டதாக, மருத்துவமனை நேற்றிரவு அறிக்கை வெளியிட்டது.
சில தினங்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்கு பிறகு, ரஜினிகாந்த் வீடு திரும்புவார். அதன்பிறகு சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் எனத் தெரிகிறது. ஆனால் முன்பே திட்டமிட்டபடி அவர் வருகிற 17ம் தேதி ஷூட்டிங் பங்கேற்க வாய்ப்பில்லை.
நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 1982ம் ஆண்டில் கூலி என்ற படத்தில் நடித்தார். அப்போது ஒரு சண்டைக் காட்சியில் அமிதாப் பச்சன் நடித்த போது, அவரது வயிற்றில் சேரில் நீட்டியிருந்த கம்பி வயிற்றுப் பகுதியில் ஆழமாக குத்தி விட்டது. பலத்த காயமடைந்த நிலையில் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் உயிர் பிழைத்து வர வேண்டும் என சினிமா ரசிகர்கள் தினமும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
பலத்த காயமடைந்திருந்த அமிதாப் பச்சனை. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர் குழு கண்காணித்து சிகிச்சை தர அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி ஏற்பாடுகளை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாவில் இருந்து மீண்டும் வந்த ஒரு நிகழ்வாக, அமிதாப் பச்சன் அந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்து மீண்டு வந்தார் என்று அன்று பாலிவுட் சினிமாவே பரபரப்பாக பேசியது.
இப்போது அதே போல் கூலி படத்தில் நடித்த போதுதான் ரஜினிக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரணமான வலியால் அவதிப்பட்ட பிறகுதான், ரஜினி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, இப்போது உயிர் பிழைத்திருக்கிறார். அதனால் சென்டிமென்ட் ஆக லோகேஷ் கனகராஜ், கூலி என்ற பெயருக்கு பதிலாக இந்த படத்துக்கு வேறு பெயர் வைக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.





