தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அவர் அமரன் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் படம், தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல், எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக அவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவர் நடிக்கும் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் அவர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் சூரி நடிப்பில் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுகாளி என்ற படத்தை எஸ்கே ப்ரொடக்சன்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் சமீபகாலமாக பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் பெயரை சொல்லி நடிக்க வாய்ப்பு தருவதாக ஆடிஷன் நடத்தி சிலர் போலி ஏஜண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனங்களும் எச்சரித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரக்டசன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை அறிவிப்பை, தனது தயாரிப்பு நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது, எங்களது சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படங்களுக்கும், காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாக தோன்றும் எந்த மின்னஞ்சல்கள் செய்திகள் அல்லது சமூக வலைதளப் பதிவுகளையும் யாரும் நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ் என்ற பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்கே தயாரிப்பு நிறுவனம் சார்பில் எச்சரிக்கை பதிவு வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





