தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த சில நடிகர்கள், நடிகைகள் பல ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், திடீரென பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவது அடிக்கடி நடக்கிறது. அந்த காலத்தில் ராமராஜன் – நளினி, கமல் – வாணி கணபதி, பிரசாந்த் – கிரஹலட்சுமி, சமீபமாக தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ்குமார் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி என சினிமா நட்சத்திரங்கள் விவாகரத்து முடிவெடுப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை தருகிறது.
அதிலும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, முன்னணி நடிகர் தனுஷை கடந்த 2004ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். லிங்கா, யாத்ரா என்ற இரண்டு வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது வலைதள பக்கத்தில் தங்களது பிரிவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். தொடர்ந்து இருவரும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவாகரத்து முடிவு என்பது வேண்டாம் என்று தனுஷ் தரப்பில் அவரது பெற்றோரும், ஐஸ்வர்யா தரப்பில் அவர்கள் பெற்றோரும் அறிவுறுத்திய நிலையில் இருவருமே அதை பொருட்படுத்தாமல் விவாகரத்து தான் எங்களது இறுதியான முடிவு என்ற உறுதியான நிலையில் இருந்தனர். குறிப்பாக தனுஷ் ஐஸ்வர்யா பிரிவால், நடிகர் ரஜினிகாந்த் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணை இந்த மாதம் 7ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை 19ம் தேதிக்கு ( நேற்று முன்தினம்) ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வருகிற நவம்பர் 2ம் தேதி இந்த விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகிற நவம்பர் 2ம் தேதியும் அவர்கள் இருவரும் விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார்கள் என்றும், மிக விரைவில் அவர்கள் தங்களது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று கொள்வார்கள். மீண்டும் வழக்கம் போல இருவரும் இணைந்து தங்களது குடும்ப வாழ்க்கையை தொடர்வார்கள் என்றும் தகவல் வேகமாக பரவி விடுகிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது ஐஸ்வர்யாவை அழைத்து பேசிய ரஜினிகாந்தின் மனைவி லதா, தனுஷூடன் வாழக் கூடாது என்ற உன் பிடிவாதம் முக்கியமா, அப்பாவின் நிம்மதி, சந்தோஷம் முக்கியமா என்ற கேள்வி எழுப்பி, மீண்டும் நீ தனுஷூடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதனால் விவாகரத்தை வாபஸ் பெறும் முடிவுக்கு ஐஸ்வர்யா வந்திருப்பதால்தான், கோர்ட் விசாரணைக்கு இருவருமே நேரில் ஆஜராகவில்லை என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.





