முன்பெல்லாம் திருவிழா காலங்களில்தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகின. குறிப்பாக கடந்த 1980, 90களில் தீபாவளி, பொங்கல் காலகட்டத்தில் 10 முதல் 15 படங்கள் வரை வெளியானது. இதில் நிச்சயமாக ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இருந்தன.
ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலை மாறிவிட்டது. சுந்தர் சி போன்ற சில இயக்குனர்கள்தால் பண்டிகை கால படங்களாக எடுக்க விரும்பி, அந்த படங்களை பொங்கல் அல்லது தீபாவளி பண்டிகை நாட்களில் வெளியிட ஆசைப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், அப்போதுதான் குடும்பங்களாக, கூட்டமாக ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது அதிக லாபத்தை பெறலாம் என்பதுதான்.
ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் படங்கள் வெளியாகும் நாட்களே ரசிகர்களுக்கு பொங்கலாக, தீபாவளியாக இருக்கிறது. எப்போது தங்களது அபிமான நடிகர் படம் ரிலீஸாகிறதோ அதையே ஒரு பண்டிகை திருநாளாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள், அடுத்த 2025ம் ஆண்டில்தான் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களுக்கு வர இருப்பதால், தியேட்டர்களில் ரசிகர்களின் திருவிழா கூட்டத்தை நினைத்து இப்போது தியேட்டர் உரிமையார்கள் லாபக்கணக்கு போடத் துவங்கி விட்டனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி, அடுத்து நடிக்க உள்ள ஜெயிலர் 2 ஆகிய 2 படங்களுமே 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப், ஷங்கர் இயக்கிய இந்தியன் 3 படங்கள் அடுத்த ஆண்டில் ரிலீஸாகின்றன. விஜய் நடித்து வரும் தளபதி 69 அடுத்த ஆண்டில்தான் ரிலீஸாக உள்ளது.
அதேபோல் அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்கள் அடுத்த ஆண்டில் ரிலீஸாகின்றன. இதுதவிர ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், சூர்யா நடித்த அவரது 44வது படம். இனி நடிக்கும் 45வது படம், தனுஷ் நடித்த இட்லிகடை, விக்ரம் நடித்த வீரதீர சூரன் என பல படங்கள் அடுத்த 2025ம் ஆண்டில் வெளிவர இருக்கின்றன. அதனால் 2025ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





