மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் வெளியானது. எதிர்பார்த்ததை போலவே படம் பயங்கர மாஸ் காட்டியிருப்பதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே 3 நாட்களில் ரூ. 30 கோடி வரை, உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடந்துள்ளது.
புஷ்பா 2 படம் மிக எளிதாக 2000 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அத்துடன் படம் 3.5 மணி நேரம் ஓடினாலும் படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் நேரம் போனதே தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். அடுத்து புஷ்பா 3 படமும் உருவாக உள்ளது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன், 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இந்த பிரிமியர் ஷோவில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனும் கலந்துக்கொண்டு ரசிகர்களுடன் படம் பார்க்க வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். அவரது குழந்தையும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
இதையடுத்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இனிமேல் தெலுங்கானாவில் எந்த நடிகராக இருந்தாலும் அவர்களது படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், புஷ்பா 2 படம் பார்க்க வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகை ரேவதி குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவியாக நடிகர் அல்லு அர்ஜூன் வழங்கியுள்ளார். இதுகுறித்து அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர், புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகை உயிரிழந்திருப்பது படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சியாக உள்ளது. இதனால் படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். புஷ்பா 2 படக்குழுவினரும், ரேவதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய தயாராக உள்ளனர். விரைவில் அவரது குடும்பத்தாரை நேரில் சந்திக்க உள்ளோம் என்று அல்லு அர்ஜுன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





