கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் புஷ்பா பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தெலுங்கு மொழியில் உருவான இந்த படம் பிறகு தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, பான் இந்தியா படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2 படம், கடந்த 5ம் தேதி உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. முதல் பாகத்தை போலவே, 2ம் பாகம் படத்துக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்த நிலையில், படம் வெளியான ஒரே வாரத்தில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையே, புஷ்பா 2 படம் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன்பு கடந்த 4ம் தேதி இரவு, ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பிரிமியர் ஷோ நடந்தது. இந்த ஷோவில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினரும் படம் பார்க்க வந்திருந்தனர். அப்போது தியேட்டருக்குள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயங்கரமான பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அந்த தியேட்டர் உரிமையாளர், தியேட்டர் மேனேஜர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலீசார் நேற்று அவரை கைதும் செய்தனர்.
இது தெலுங்கு பட வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி கோர்ட் விடுதலை செய்தது. இதையடுத்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனை தெலுங்கு நடிகர், நடிகைகள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மிக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது மகேஷ் பாபுதான். ஆனால் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க மறுத்துவிட்டார். அதே போல் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலா சமந்தாவிடம் நடிக்க கேட்டு, அவரும் கிராமத்து பெண் கேரக்டர் என்பதால் விருப்பமில்லை என கூறியிருக்கிறார். வில்லன் பகத் பாசில் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்ட நிலையில், பிஸியாக மற்ற படங்களில் இருந்ததால் கால்ஷீட் இல்லை என மறுத்ததாக தெரிய வந்துள்ளது. மகேஷ்பாபு சமந்தா விஜய் சேதுபதி கூட்டணியே மாஸாக இருக்குதே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.





