கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியான படம் என் ராசாவின் மனசிலே. இளையராஜா இசையில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் மீனா வடிவேலு ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது.
இந்நிலையில் தொடர்ந்து ராஜ்கிரண் அரண்மனை கிளி எல்லாமே என் ராசாதான் பாசமுள்ள பாண்டியரே பொன்னு விளையற பூமி மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக நந்தா முனி சண்டக்கோழி சண்டக்கோழி 2 தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி கிரீடம் மஞ்சப்பை கொம்பன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவுக்கு அப்பா கேரக்டரில் ராஜ்கிரண் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து இப்போதும் ராஜ்கிரண் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் தனுஷ். கடந்த 2017ம் ஆண்டில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான அவரது முதல் படம் ப பாண்டி. இதில் ராஜ்கிரண் கதாநாயகனாகவும், ரேவதி கதாநாயகியாகவும் நடித்திருந்தார். பிளாஷ்பேக்கில் இதே கேரக்டர்களில் தனுஷூம், மடானா செபாஸ்டியனும் நடித்திருந்தனர். பெரிய வெற்றியை பெற்ற ப பாண்டி படம்தான் தனுஷ் இயக்கிய முதல் படம். 2வது படமாக கடந்தாண்டில் ராயன் வெளியானது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் தனுஷூம், ராஜ்கிரணும் பங்கேற்றனர். அப்போது ராஜ்கிரண் கூறுகையில், 27 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா, என்னை கதாநாயகன் ஆக்கினார். என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலமாக. 27 வருஷம் கழிச்சு திரும்பவும் என்னை அவரது மகன் தனுஷ், ப பாண்டி படம் மூலமாக கதாநாயகன் ஆக்கிட்டார் என்று நடிகர் ராஜ்கிரண் பெருமிதமாக பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் தனுஷ், அப்பா இவரை கதாநாயகன் ஆக்கினார் என்பதை விட, அவர் என் ராசாவின் மனசிலே படத்தை இயக்க எங்க அப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் என்பதுதான் உண்மை. ஆனா அதை சொல்லும்போது, அப்படிச் சொல்லாமல் அவர்தான் என்னை கதாநாயகன் ஆக்கினார் என்று சொல்வது பெரிய மனிதர்கள் பெருந்தன்மைக்குமான எடுத்துக்காட்டு என்று கூறி அசத்தியிருக்கிறார்.





