சென்னை தி நகரில் உள்ள போக் ரோட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு உள்ளது. அன்னை இல்லம் என்ற இந்த பிரமாண்ட பங்களாவில்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து மறைந்தார். இந்த வீட்டில் பாசமலர் உள்ளிட்ட சில படத்தின் படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டுள்ளது. சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் இங்குதான் உள்ளனர்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் தொழிலதிபராக வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி என்ற படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார். இவரது மகன் துஷ்யந்த் சினிமா தயாரிப்பாளராக உள்ளார்.
சிவாஜியின் இளைய மகன் பிரபு, நடிகராக உள்ளார். அவரது மகன் விக்ரம் பிரபுவும் நடிகராக உள்ளார். நடிகர் பிரபுவின் மருமகன், அஜீத்குமார் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள குட்பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபுவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ராம்குமாரின் மகன், சிவாஜி கணேசனின் துஷ்யந்த் என்பவர் ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஷ்ணு விஷால் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிக்க தனலட்சுமி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் ரூ. 3. 74 கோடி கடனாக வாங்கியுள்ளார். கடன் மற்றும் வட்டியை அவர் திருப்பித் தராத நிலையில், அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து கடன் மற்றும் வட்டியுடன் சேர்ந்து ரூ. 9.39 கோடியை செலுத்துமாறு ராம்குமார் மகன் தயாரிப்பாளர் துஷ்யந்த்துக்கு கோர்ட் உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து பதிலளிக்க கோர்ட் அவகாசமும் அளித்தது. ஆனால் தொகையை திருப்பித் தராமலும், எவ்வித பதிலும் துஷ்யந்த் அளிக்காத நிலையில் சென்னை உயர்நீதி மன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருப்பார். அவர் நடித்த கடைசி படமும் இதுதான். இந்த படத்தில் ஒரு காட்சியில் தான் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறும் ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் உருக்கமாக நடித்திருப்பார். அதையே நிஜ வாழ்வில் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டாரே என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு புலம்புகின்றனர்.





