தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். நடிகராக மட்டுமின்றி நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அடையாளங்களை கொண்டிருக்கிறார். மேலும் மாற்றம் என்ற சேவை அமைப்பை கடந்த ஆண்டு மே மாதம் துவங்கி கடந்த ஓராண்டாக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சமீபத்தில் சேமித்த பணத்தை பாதுகாப்பாக வைக்க தெரியாமல், டப்பாவில் போட்டு மண்ணுக்குள் ஒளித்த வைத்த கூலித் தொழிலாளியின் 1 லட்சம் ரூபாய் பணம் கரையான் அரித்து வீணாக போனது. இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை நேரில் வரவழைத்து அவர் இழந்த ரூ. 1 லட்சத்தை ராகவா லாரன்ஸ் வழங்கி உதவினார்.
எப்போதுமே கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதில் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது அம்மாவுக்காக சொந்தமாக கோவில் கட்டியிருக்கிறார். தனது மாற்றம் சேவை அமைப்பின் சார்பில் ஏழை விவசாயிகளுக்காக 11 டிராக்டர்களை வாங்கி கொடுத்திருக்கிறார். இதில் ஒரு டிராக்டர் நடிகர் எஸ்ஜே சூர்யா தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடன இயக்குனராக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் ராகவா லாரன்ஸ். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்த ராகவா லாரன்சை, நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் கடிதம் கொடுத்து டான்ஸ் குரூப்பில் சேர்த்துக் கொள்ள சொன்னவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அதன்பிறகு பல படங்களில் டான்ஸ் ஆடிய ராகவா லாரன்ஸ் அதன்பிறகு டான்ஸ் மாஸ்டராக பல தமிழ் தெலுங்கு படங்களில் பணிசெய்தார்.
இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த படம் அமர்க்களம். கடந்த 1999ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடலுக்கு நடனமாடி திரையில் அறிமுகமானவர்தான் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். அதையடுத்து பார்த்தேன் ரசித்தேன் அற்புதன் ஸ்டைல் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் முனி படம் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று பின்னாளில் பெரிய ஸ்டார் நடிகராக மாறினார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, நான் இப்போது வாழும் இந்த வாழ்க்கைக்கு காரணம் நடிகர் அஜீத்குமார்தான். அமர்க்களம் படத்தில் நான் நடித்த பாடல் காட்சிதான் எனக்கு சினிமாவில் நுழைய காரணமாக இருந்தது. காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா பாடல் காட்சியில் நானே ஆடி விடுகிறேன், லாரன்ஸ் வேண்டாம் என்று அஜீத்குமார் கூறியிருந்தால், எனக்கு இந்த வாழ்க்கை இல்லை. அவரது பெருந்தன்மையே இதற்கு காரணம் என்று ராகவா லாரன்ஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





