தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் கடந்தாண்டில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் சில வாரங்களுக்கு முன் வெளியான விஜய் சேதுபதியின் 51வது படம் ஏஸ் படம் பயங்கர தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மிஸ்கின் இயக்கிய ட்ரெயின் என்ற படமும் இயக்குனர் பாண்டிராஜன் இயக்கிய தலைவன் தலைவி என்ற படமும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் இப்போது நடிக்க வந்து விட்டார். பீனிக்ஸ் என்ற புதிய படத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சண்டை பயிற்சியாளர் அனல் அரசு முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ். இந்த படத்தில்தான் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். வரும் ஜூலை 4ம் தேதி பீனிக்ஸ் படம் வெளிவருகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார்.
விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, என்னுடைய மகன் சூர்யாவைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் அனல் அரசுக்கு மிகப்பெரிய நன்றி. 2019ம் ஆண்டில் என்னிடம் அனல் அரசு ஒரு கதையைச் சொன்னார். ஆனால் அப்போது அதை நான் பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா அந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார். எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன். அதன்பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களில் அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்களிலும் நான் கலந்து கொள்ளவில்லை.
சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா என்று மட்டும் கேட்பேன். அவரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பார். அவ்வளவுதான். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக சூர்யா சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம் இது என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





