தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கில் உருவான அருந்ததீ பாகுபலி பாகுபலி 2 ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழில் வேட்டைக்காரன் ரெண்டு சிங்கம் 1 சிங்கம் 2 லிங்கா இஞ்சி இடுப்பழகி என பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2015ம் ஆண்டில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் பருமன் அதிகமாக உள்ள கேரக்டரில் நடித்த அனுஷ்கா, அதற்காக உடல் எடையை அதிகரித்தார். இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்துக்கு பின் அனுஷ்கா தனது உடல் எடையை குறைக்க முடியாமல் நடுத்தர வயது பெண்மணி போல் காட்சியளித்தார்.
அதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகளின்றி இருந்த அனுஷ்கா இப்போது உடல் எடை குறைந்த நிலையில் பழையபடி ஸ்லிம் ஆக காணப்படுகிறார். மேலும் கிரிஷ் இயக்கத்தில் அவர் நடித்த காதி என்ற படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகியை மையப்படுத்திய காதி, நடிகை அனுஷ்காவுக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் வாரிசு சுல்தான் குபேரா ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கில் ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியில் அனிமல் படத்தில் படுகவர்ச்சியாக நடித்ததால் இந்தியிலும் ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இப்போது ராஷ்மிகா மந்தனா நடித்த தி கேர்ள் பிரண்ட் என்ற படம் உருவாகி உள்ளது. இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த படத்தில் இருந்து நதிவே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அதிக கவனம் பெற்ற முன்னணி நாயகிகளாக தான் உள்ளனர். அனுஷ்கா நடித்த காதி, ராஷ்மிகா நடித்த தி கேர்ள் பிரண்ட் ஆகிய 2 படங்களுமே நாயகியை மையப்படுத்திய கதைக்களத்தில்தான் உருவாகிறது. 2 படங்களுமே வருகிற செப்டம்பர் 5ம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் 2 பேரில் ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.





