தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே கவனிக்கத்தக்க வகையில் முக்கியமான திரைப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம்தான் அவர் இயக்குனராக அறிமுகமான முதல் காவியம். ஆக்சன் பாணியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் லோகேஷ் கனகராஜ் யார் என்பதும் தமிழ் திரை உலகத்திற்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, கார்த்தியுடன் கைதி, தளபதி விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசன் உடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ என அவரது கிராஃப் பெரிய அளவிற்கு உயர்ந்தது. இதில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பதை அறிமுகம் செய்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் இயக்குனர்.
இப்படியான சூழலில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் கூலி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்த மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா வரும் இரண்டாம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் படத்திற்கு பிரமோஷன் செய்யும் விதமாக பேட்டியளிக்கும் லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி கோபிநாத் நடத்திய இன்டர்வியூவில் அவர் பேசி இருப்பதாவது, கூலி திரைப்படம் முழுவதையும் ரஜினி சார் பார்த்து விட்டார். அதைத்தொடர்ந்து என்னிடம் வந்து நாம் மீண்டும் ஒரு திரைப்படம் செய்யலாம் என்று கூறினார்.
இதனால் நாங்கள் மீண்டும் இணைவது குறித்து பேசி வருகிறோம். நிச்சயமாக அது கூலி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது. இந்த திரைப்படத்தில் வழக்கமான தொடக்கம் மற்றும் முடிவு இருக்கும். எனக்கு முழுக்க முழுக்க ஒரு போலீஸ் கதாபாத்திரம் கொண்ட படத்தை எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. உண்மை சம்பவத்தை தழுவிய ஒரு காவல்துறை சம்பந்தப்பட்ட கதையை எடுப்பதில் விருப்பமாக இருக்கிறேன்.
அருண் மாதேஸ்வரன் எனது நண்பன் தான். அவன் எடுக்க இருந்த இளையராஜா பயோபிக் திரைப்படம் சற்று தள்ளிப் போய் இருக்கிறது. இதனால் ஒரு ஆக்ஷன் கதை களத்தில் என்னை ஹீரோவாக நடிக்கிறாயா என்று கேட்டுக் கொண்டான். எனக்கும் அதில் ஆர்வம் இருப்பதால் ஒப்புக்கொண்டேன். கைதி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு முன்பு 8 மாதங்கள் இருப்பதால், அதை செய்யலாம் என்று விரும்பினேன். இதற்காகத்தான் உடல் எடையை குறைத்து தாடி எல்லாம் வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்.





