தமிழ் சினிமாவில் இன்று பிஸியான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி என பிற மொழிகளிலும் பிஸியான ஒரு இசையமைப்பாளராக அனிருத் மாறிவிட்டார். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தவம் இருக்க வேண்டிய ஒரு சூழலில் இசைத்துறையில் அதிக கவனம் பெற்ற இசை ஆளுமையாக அனிருத் மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் மூலம் உலக அளவில் ஹிட்டாகி முதல் படத்திலேயே பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிருத்.
இப்போது சினிமா இசைத்துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அனிருத் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான கூலி படத்திலும் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அவரது இசையில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.
இந்நிலையில் கூலி படத்தை பார்ப்பதற்காக அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்திரா ஒரு தியேட்டருக்கு நேரில் வந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், நடிகர் ரவி ராகவேந்திராவிடம், உங்கள் மகன் அனிருத்துக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை.
நான் உங்களைத் தான் கேட்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அவர் திருமணத்துக்கு என்னையும் கூப்பிடுங்கள் என்று கிண்டலாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது பெரிய சர்ச்சையாக மாறி இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டில் பிறந்த அனிருத்துக்கு 35 வயதாகிறது. இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவரது தந்தையிடம், உங்கள் மகனுக்கு திருமணம் எப்போது என்று கேட்டால் அதுபற்றி சொல்லாமல் இப்படி கிண்டலாக பேசியிருப்பது ரசிகர்களை அப்செட் ஆக செய்துள்ளது. மேலும் நடிகர் ரவி ராகவேந்திரா கடந்த 1990களில் வெளிவந்த விசு இயக்கிய சில படங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூலி படத்திலும் ஒரு காட்சியில் இவர் நடித்திருக்கிறார்.





