தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் வேகமாக சூடுபிடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வருகிற 13ம் தேதி மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருது 2026ம் ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. இதற்கிடையே தனது தவெக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்தாண்டில் சிறப்பாக நடத்திய விஜய், அதன்பிறகு கோவையில் பூத்கமிட்டி கூட்டத்தை நடத்தி முடித்தார். அதன் பிறகு கடந்த செப்டம்பர் 21ம் தேதி மதுரையில் தவெக 2வது மாநில மாநாட்டை வெற்றிக்கரமாக முடித்த விஜய், அடுத்தகட்டமாக வருகிற 13ம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
விஜய் 2026 என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார். மாவட்டம் வாரியாக மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டு அதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், தவெக கட்சியின் நோக்கங்களையும் திட்டங்களையும் விளக்கும் வகையில் இந்த சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் திருச்சியில் இந்த சுற்றுப்பயணம் 13ம் தேதி துவங்குகிறது.
திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் துவங்குகிறார். தொடர்ந்து அவர் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். ஒரு நாளைக்கு 2 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி ஒரு முக்கிய நகரம் என்பதாலும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம் என்பதாலும் திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை நடிகர் விஜய் துவங்குகிறார்.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் நெரிசலான பகுதி என்பதால் அங்கு கூட்டத்தில் விஜய் பேச போலீஸ் அனுமதி தரவில்லை. அங்கு அருகில் உள்ள சந்தைப்பேட்டை அல்லது வேறு ஒரு பகுதியில் நடிகர் விஜய் பேசுவார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து திருச்சியில் சில பகுதிகள் மற்றும் பெரம்பலூர் அரியலூர் திருவள்ளூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
முதல் வாரத்தில் திருச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களிலும் அடுத்ததாக 2வது வாரத்தில் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்யும் நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்தித்து பேசுகிறார். 3வது வாரம் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறார். இப்படி தொடர்ந்து பல மாவட்டங்களில் அவரது சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணங்களால் மக்களை இன்னும் விஜய் நெருக்கமாக சென்று சந்தித்து தனது கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார்.





