நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் நேற்று முன்தினம் 5ம் தேதி வெளியானது. வழக்கமாக பண்டிகை நாட்களில் வெளியாகும் தமிழ் படங்கள் சிறப்பு காட்சியுடன் அன்று ஒரு நாள் மட்டும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மதராஸி படம் பெரும்பாலான தியேட்டர்களில் 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டன.
அமரன் என்ற மாஸ் ஹிட் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் மதராஸி. ஆனாலும் படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இவர் தமிழ் மற்றும் இந்தியில் நிறைய வெற்றிப் படங்களை தந்தவர்தான். என்றாலும் கடைசியாக அவர் இயக்கிய தமிழ் படம் தர்பார், இந்தி படம் சிக்கந்தர் என 2 படங்களுமே பிளாப் படங்களாக போய்விட்டன.
அதனால் மதராஸி படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ரசிகர்களிடம் காணப்பட்டது. அதனால்தான் எதிர்பார்த்த அளவுக்கு மதராஸி படத்துக்கு ஆன்லைன் புக்கிங் முன்பதிவு கூட நடக்கவில்லை. சென்னை போன்ற நகரங்களிலேயே முன்பதிவு மிக மந்தமாக இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் மதராஸி படம் வௌியான பிறகு நல்ல விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்து வருகிறது. சமீபகாலமாக பெரிய நட்சத்திர நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. நெகட்டிவ் விமர்சனங்களால் கட்டம் கட்டப்படுகின்றன. ஆனால் மதராஸி படத்தை பொருத்த வரை காதல் சென்டிமென்ட் ஆக்சன் என ரசிகர்களுக்கு போதிய திருப்தி கிடைக்கிறது.
மதராஸி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்திருக்கிறார். அதே நேரத்தில் காதல் தோல்வியடைந்த இளைஞனாகவும் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு அப்பாவியாகவும் அதே நேரத்தில் மனநலம் பாதிப்பால் ஆபத்தில் இருப்பவர்களை உதவ ஓடும் அவரது குணத்தாலும் படத்தில் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டது.
அதே போல் கதாநாயகி ருக்மணி வசந்த் வில்லன் வித்யூத் ஜாம்வால் படத்துக்கு பெரிய பக்கபலமாக இருந்துள்ளனர். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது. அதனால் மதராஸி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறி வருகிறது. முதல் நாளில் 12.8 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் 2வது நாளில் ரூ. 50 கோடி வசூலை கடந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது உறுதியான தகவலா என்று தெரியவில்லை.





