மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மோகன்லால். கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். நடிகர் மோகன்லால் நடிக்க வந்த பிறகு ஏராளமான இளம் நடிகர்கள் மலையாள சினிமாவில் நடிக்க வந்து விட்டனர். ஆனாலும் இப்போது வரை நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நடிகர் மோகன்லால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு விதமான கதையம்சம் கொண்ட படங்களிலும் கேரக்டர்களிலும் நடித்து மத்திய அரசின் தேசிய விருது, கேரளம் மாநில அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை நடிகர் மோகன்லால் பெற்றிருக்கிறார். தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர், கமல்ஹாசனுடன் உன்னைப்போல் ஒருவன் விஜயுடன் ஜில்லா படத்திலும் மோகன்லால் நடித்திருக்கிறார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் என்ற படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்தவர் மோகன்லால் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் மோகன்லால் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்குகிறார்.
இந்த படத்தில் அப்பா மகன் பாசத்தை மையப்படுத்திய கதையில் மோகன்லால் அப்பாவாகவும் சிவகார்த்திகேயன் மகனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் மோகன்லாலின் திரையுலக பயணம் வாழ்நாள் சாதனை ஆகியவற்றை பாராட்டி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த விருதான தாதே சாகிப் பால்கே விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.
இதனால் கேரளாவிற்கும் மலையாள சினிமா துறைக்கும் மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுத் தந்த நடிகர் மோகன்லாலுக்கு மிக பிரம்மாண்டமாக விழா எடுத்து மரியாதை செய்ய கேரளம் மாநில அரசு முன்வந்திருக்கிறது. இந்த விழா வருகிற 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நடைபெற உள்ளது.
லால் சலாம் என்கிற தலைப்பில் நடைபெறும் இந்த விழாவில் கேரளம் மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிகர் மோகன்லாலை கவுரவிக்க உள்ளனர். இந்த அதிகாரபூர்வமான தகவலை கேரளம் அரசின் கலை மற்றும் பண்பாடுத் துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார். இதில் தமிழ் சினிமா சார்ந்த மோகன்லால் நண்பர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்றவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது.





