நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் ( தி கோட்) ஆகிய படங்களில் நடித்து முடித்து அந்த படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் கடைசியாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம்தான் அவரது 69வது படமாகவும் கடைசி படமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்தாண்டில் துவங்கிய நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துக்கு பிறகு நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதே நேரத்தில் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் ஒருவேளை அவர் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அவர் சினிமாவுக்கு நடிக்க வரவும் அதிக வாய்ப்புள்ளது.
பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டது. அதே நாளில் பிரபாஸ் நடித்த தி ராஜாசாப் என்ற படமும் வருகிறது. அதன்பிறகு 5 நாட்கள் கழித்து சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒரு சூழலில் வருகிற தீபாவளிக்கு ஜனநாயகன் படத்தில் இருந்து அதாவது வருகிற 20ம் தேதி, விஜய் பாடிய பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என தகவல் முதலில் வெளியானது. பிறகு தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது நடப்பு வாரத்தில் அந்த பாட்டு ரிலீஸாகும் என்றும் ஒரு தகவல் வெளியானது. குறிப்பாக நாளை மறுதினம் 5ம் தேதி விஜய் பாடிய பஃர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
ஆனால் தற்போது அந்த பஃர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிடும் முடிவே ரத்து செய்யப்பட்டு விட்டது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த மிக மோசமான துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் தமிழக மக்கள் மீளாத நிலையில் ஜனநாயகன் முதல் பாடல் வெளியீடு திட்டத்தையே படக்குழு ரத்து செய்துவிட்டது.
அதே போல் வருகிற டிசம்பரில் 27ம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவும் ஒரு திட்டம் இருந்தது. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அரசியல் கட்சி தலைவராக நடிகர் விஜய் இப்போது மிகவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆளுங்கட்சி திமுக மீது இந்த விவகாரத்தில் அவர் பழி போட்டாலும் ஒரு கட்சி தலைவராக தன்னை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அவர் தவறியது மாபெரும் குற்றமாக தான் பார்க்கப்படுகிறது.





