தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர். அவரைப் போலவே அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் முன்னணி நடிகராக ஆர்வமாக படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே சண்முக பாண்டியன் மதுர வீரன் சகாப்தம் படைத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் இன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ஒரு திரைக்கதையில் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
மேலும் நடிகர் சரத்குமார் கொம்பு சீவி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். நாட்டாமை படத்தில் கிளாமர் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள் தார்னிகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் கொம்பு சீவி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து அவர் பெரிய நடிகராக உச்சத்தை தொடும் வரை அவரது வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். நடிகர் விஜயகாந்தை ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக உருவாக்கியதில் பெரும்பங்கு அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தருக்கு உண்டு. ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்தவரும் அவர்தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, நான் பிறந்தபோது எனக்கு வெச்ச பேர் சண்முக பாண்டியன் கிடையாது. எனக்கு முஸ்லிம் பெயர்தான் அப்பா வெச்சார். அப்பாவுக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். அதுவும் இல்லாம இப்ராஹிம் ராவுத்தர் மாமா என்றால் அப்பாவுக்கு ரொம்பவும் உயிர். அதனால் அவர் மேல இருந்த அன்பால் எனக்கு சவுகத் அலி என்று பெயர் வைத்தார்.
மாமா வேணாம்ன்னு சொன்னார். ஆனா அப்பா ஒத்துக்கலே. எனக்கு ஜாதி மதம் கிடையாதுன்னு சொன்னார். ஆனா முஸ்லிம் பெயர் வைத்தால் எதிர்காலத்தில் பாஸ்போர்ட் ரேஷன் கார்டு இதில் எல்லாம் பிரச்சனை வரும். இந்து முறைப்படி பெயர் வை என்று ராவுத்தர் மாமா சொன்னதுக்கு அப்புறம் தான் சண்முக பாண்டியன் என்று என் பெயரை மாற்றி வைத்தார்கள் என்று நடிகர் சண்முக பாண்டியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





