- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி நிறுவனங்களை நம்பி வாழும் அகதிகளாக தமிழ் சினிமா படைப்பாளிகள் நடுத்தெருவில் நிற்கிறோம் - பிரபல...

ஓடிடி நிறுவனங்களை நம்பி வாழும் அகதிகளாக தமிழ் சினிமா படைப்பாளிகள் நடுத்தெருவில் நிற்கிறோம் – பிரபல இயக்குனர் ஆவேசம்!

- Advertisement -

வெய்யில் அங்காடித்தெரு அரவான் காவியத்தலைவன் ஜெயில் அநீதி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வசந்தபாலன். அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்கள் புதிய ஹீரோக்கள் 2ம் நிலை 3ம் நிலை ஹீரோக்கள் புதிய இயக்குனர்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. ஓடிடி தளங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை.

படத்தை எடுத்து வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டி இருக்கிறது. ஓட ஓட சினிமாவை விரட்டுகிறார்கள். முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும். அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்கும் என்றால் இங்கே ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

- Advertisement -

நல்ல திரைப்படம், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் பேச்சு இல்லை. பெரிய நிறுவன படங்கள் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம். மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களும் தொலைக்காட்சி சேனல்களும் திரையரங்குகளும். சொந்த நாட்டிலேயே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை.

இப்படி 4 ஆண்டுகளாக படம் இயக்க முடியாத நிலை. படம் இயக்கினாலும் எங்கே விற்பது? யாரிடம் சென்று கையேந்தி நிற்பது? யார் வாங்குவார்கள்? எங்கு திரையரங்கம் கிடைக்கும் என்றொரு பரிதாப நிலை. இது எனக்கு மட்டுமல்ல. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் 90 சதவீதம் பேரின் நிலைமை இதுவே. நெட்பிளிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை சிறிய படங்களை நல்ல இயக்குனர்கள் திரைப்படங்களை புறக்கணிக்கிறது.

- Advertisement -

போன ஆண்டு நெட்பிளிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள். ஒரு சிறு தயாரிப்பாளராக தேசிய விருது பெற்ற இயக்குனராக நெட் பிளிக்ஸ்க்கு எனது ஆழ்ந்த கண்டனங்கள் என்று இயக்குனர் வசந்தபாலன் தனது எக்ஸ் பதிவில் ஆவேசமாக கூறியிருக்கிறார். நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் சிறிய படங்களை புதிய இயக்குனர்கள் சிறு தயாரிப்பாளர்களின் படங்களை புறக்கணிப்பதை அவர் இதில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது தளம் வாங்கியுள்ள சில தமிழ் படங்கள் பற்றிய அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமே இருந்தன. எந்த ஒரு சிறிய படமும் இடம்பெறவில்லை. இந்த சூழ்நிலையில் இயக்குனர் வசந்தபாலனின் இந்த ஆவேசமான பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்