தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடிகராக இளைய தளபதி தளபதி ஆகிய பட்டங்களுடன் வலம் வந்தவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கம் துவங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்து, இம்மாதம் 2ம் தேதி முதல் 3ம் ஆண்டும் துவங்கி விட்டது. இதுவரை 2 அரசியல் மாநாடுகளும் நடந்து முடிந்து விட்டது. வருகிற மே மாதம் சட்டசபை தேர்தலும் வரப் போகிறது.
ஆனால் இதுவரை தவெக கட்சியின் தலைவராக நடிகர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. முறையாக பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களிடம் பேசவில்லை. அவர்களின் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில்களை கூறவில்லை. இது விஜய் மீது வைக்கப்படும் ஒரு முக்கிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு விஜய் நேர்காணல் தந்ததாக வெளியான தகவலும் வதந்தி என்பது உறுதியாகி விட்டது. அவர்கள் விஜயுடன் நேர்காணல் செய்யவே இல்லை என்றும் அவர் பேச்சுவாக்கில் சொன்ன சில தகவல்களை நேர்காணல் போல சிலர் இணையத்தில் பரவ விட்டுள்ளனர் என்ற தகவலும் பின்பு வெளியானது. ஜனநாயகத்தின் 4வது தூணை ஜனநாயகன் தவிர்ப்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன். அண்ணாச்சி என அழைக்கப்படும் லெஜண்ட் சரவணன் இப்போது லீடர் என்ற தனது 2வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்திருக்கிறார். இதற்கு முன்பு அண்ணாச்சி லெஜண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
லீடர் படத்தின் பிரமோ நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட அவரிடம், பிரஸ்மீட் வேண்டாம். தாறுமாறாக கேள்வி கேட்பார்கள். அதையே ட்ரோல் செய்து விடுவார்கள் என்று அவரது நண்பர்கள் நலம் விரும்பிகள் எச்சரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், நாம் சினிமாவில் நடிக்க வந்துவிட்டோம். இன்னும் எத்தனை நாள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் எஸ்கேப் ஆக முடியும்?
அவர்களை நான் கண்டிப்பாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று துணிச்சலாக கூறிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து நேரடியாக பேசியிருக்கிறார். அவர்களது கேள்விகளுக்கும் கேஷூவலாக பதில் அளித்திருக்கிறார். 2 படங்களில் நடித்த லெஜண்ட் சரவணனின் துணிச்சலும் மன தைரியமும் 69 படங்களில் நடித்த நடிகர் விஜய்க்கு இல்லையே என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.





