தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் அசத்திய பல நடிகர்கள் இருக்கின்றனர். அதில் கவுண்டமணி செந்தில் ஜோடியை ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. குறிப்பாக 1980 90களில் அவர்கள் இருவரும் இணைந்து நடத்திய காமெடி சாம்ராஜ்யம் என்பது தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தது. கரகாட்டக்காரன் படத்தின் காமெடி இன்றும் டிரண்டிங்கில் உள்ளது.
அந்த காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி கூட்டணி இருந்தாலே அந்த படத்தின் வெற்றி 50 சதவீதம் உறுதியாகி விடும். அதுவும் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் ராமராஜன் போன்ற ஹீரோக்களின் படங்களில் கவுண்டமணி செந்தில் கூட்டணிபடத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்தது.
நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரையுமே தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தது நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் தான். திறமைசாலிளை அடையாளம் கண்டறிந்து விட்டால் பாரதிராஜா போலவே அவரது சிஷ்யர் பாக்யராஜூம் அவர்களை ஜெயிக்க வைத்து விடுவார். இப்படி கே பாக்யராஜால் அடையாளம் காணப்பட்ட வெற்றியாளர்கள்தான் கவுண்டமணி செந்தில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, ஆரம்பத்துல நடிக்க வராத போது செந்திலை மத்தவங்க ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு பார்க்க ரொம்ப பாவமாக இருக்கும். நாடக நடிகர்கள் எல்லாம் சுத்தி உட்கார்ந்துட்டு செந்திலை தான் ரொம்பவும் விரட்டுவாங்க.
போய் டீ வாங்கீட்டு வா காப்பி வாங்கீட்டு வா என்று எடுபிடி ஆளாக செந்திலை வெச்சிருந்தாங்க.அவங்களே நாடக நடிகர்கள்தான். பெரிய வசதியானவங்க இல்லை. ஆனா செந்திலை எடுபிடி ஆளாக பாடாய்படுத்துவாங்க. பாவம்யா இந்த ஆளு என்று செந்திலை பார்த்துபரிதாபப்படுவேன். எனக்கு சினிமாவில் வாய்ப்பு வரும்போது செந்திலுக்கு வாய்ப்பு தரணும் என்று அப்பவே மனசுல நெனைச்சுட்டேன்.
நான் படங்கள் பண்ணும்போது மௌன கீதங்கள், தூறல் நின்னுபோச்சு படங்களில் செந்திலை நடிக்க வெச்சேன். அப்போ டயலாக் எல்லாம் பேசி நடிக்கும் போது செந்தில் அழுதுட்டே இருந்தான். தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் கூட அவரோட அசிஸ்டென்ட் மாதிரி செந்திலை நடிக்க வெச்சேன். அதை நெனைச்சு நெனைச்சு 2 நாளைக்கு ஒரு தடவை செந்தில் அழுவான். நான் நெனைச்சே பார்க்கலைண்ணே என்கிட்ட சொல்லி சொல்லி அப்படி அழுவான் என்று இயக்குனர் கே பாக்யராஜ் அதில் கூறியிருக்கிறார்.





