தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரித்தவுடன் ரசிகர்கள் சிலருக்கு சட்டென வில்லன் நடிகர் எம்என் நம்பியாரும் நினைவுக்கு வந்து விடுவார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் நடித்த படங்களில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் எம்என் நம்பியார். நடிப்பு ஆளுமை நிறைந்த மிகச் சிறந்த கலைஞராக சினிமாவில் அவர் விளங்கினார்.
நடிகர் கமலுக்கு ஒரு நாசர், நடிகர் ரஜினிக்கு ஒரு ரகுவரன், நடிகர் விஜயகாந்துக்கு ஒரு ராதாரவி போல புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வில்லனாக பல படங்களில் நடித்து நடிகர் எம்என் நம்பியார் அசத்தினார். இதில் நினைத்ததை முடிப்பவன் போன்ற சில படங்களில் போலீஸ் அதிகாரி போன்ற நல்ல கேரக்டர்களிலும் நம்பியார் நடித்திருக்கிறார்.
நடிகர் நம்பியாரை பொருத்த வரை சபரிமலை ஐயப்ப சுவாமியின் தீவிர பக்தர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு பயணம் செய்தவர். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்ற குருசாமியே அவர்தான். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்ட அவர் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் இல்லாதவர்.
அதிலும் உணவு விஷயத்தில் அதிக கவனம் கொண்டவர். அவர் உணவில் அசைவத்தை முற்றிலும் தவிர்ப்பவர். சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வார். அதுவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு தனியாக சமையல்காரர் உண்டு. சென்னையில் நடக்கும் ஷூட்டிங் என்றால் வீட்டில் இருந்தே உணவு தயாராகி நம்பியாருக்கு வந்து விடும்.
மேலும் நடிகர் நம்பியார் தனது 13வது வயதிலேயே தற்காப்பு கலைகளை சிறப்பாக கற்றவர். சிலம்பம் ஜூடோ கராத்தே போன்ற கலைகளை முழுமையாக திருத்தமாக கற்றவர். அதனால் தான் நடிகர் இயக்குனர் கே பாக்யராஜ், தனது தூறல் நின்னு போச்சு படத்தில் எம்என் நம்பியாரை குஸ்தி வாத்தியார் கேரக்டரில் நடிக்க வைத்து அவரது திறமையை வெளிக்காட்டி இருப்பார்.
எம்எம் நம்பியாருக்கு 19 வயது ஆனபோது அவர் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ராணுவ பயிற்சி மையங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அசைவ உணவுகள்தான் பரிமாறப்படும். அதனால் அங்கு தனக்கு பரிமாறப்பட்ட அசைவ வகை உணவுகளை சாப்பிட மறுத்த எம்என் நம்பியார் அந்த பணியில் இருந்தே விலகி விட்டார் என்ற ஒரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.





